×

முகத்துக்கு கவசமும் கிடையாது; சமூக இடைவெளியும் கிடையாது: நாங்கதான் கெத்து!

ஜோகன்னஸ்பெர்க்: உலகிலேயே கொரோனா வைரஸ் நுழையாத ஒரே இடம்... மாஸ்க் அணியாமல் மக்கள் சுதந்திரமாக உலாவக் கூடிய ஒரே இடம் எது தெரியுமா...? அதுதாங்க, அண்டார்டிகா. இப்போது அந்த அண்டார்டிகாவிலும் கொரோனா பயம் வந்து விட்டது. உலகில் எந்த ஒரு நாட்டையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் முதல் உலகின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல். எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என இதுவரை மனித இனம் சந்திக்காத புதுவகையான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலிலும், பனி சூழ்ந்த கண்டமாகிய அண்டார்டிகா மட்டுமே பாதுகாப்பாக உள்ளது. அங்குள்ள 1000 விஞ்ஞானிகள் மாஸ்க், சமூக இடைவெளி போன்ற எந்த கட்டுப்பாடுகள் இன்றி, குறிப்பாக கொரோனா பயமின்றி சர்வ சுதந்திரமாக தங்கள் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அண்டார்டிகா ஆராய்ச்சி மையத்தில் தங்கியுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த ரோதிரா என்ற விஞ்ஞானி கூறுகையில், ‘‘இங்கு ஆராய்ச்சி பணிக்கு வருபவர்களுக்கு நீண்ட காலம் தனிமைப்படுத்துதல், தற்சார்பு, மனரீதியாக பயிற்சிகள் ஆகியவை பொதுவான விதிமுறைகளாகும். இந்த விதிமுறைகளை உலக மக்கள் வித்தியாசமாக பார்த்தனர். ஆனால் இப்போது பாருங்கள். நிலைமையே மாறி விட்டது. இங்கிலாந்தில் உச்சகட்ட ஊரடங்கில் இருந்ததைக் காட்டிலும் இங்கு அதிகப்படியான சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். மாஸ்க் அணிய வேண்டியதில்லை, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டியதில்லை. எப்போதும் போல் பனிச்சறுக்கு விளையாடி, ஜிம்மில் பயிற்சி செய்து சுதந்திர வாழ்க்கை வாழ்கிறோம்’’ என்கிறார்.
ஆனால் இப்படிப்பட்டி அண்டார்டிகாவுக்கும் ஆபத்து வந்து விட்டது. இன்னும் ஒரு வாரம் அல்லது ஒரு வாரத்தில் குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கப் போகிறது. அதோடு புதிய விஞ்ஞானிகள் உலகின் பல நாடுகளில் இருந்தும் அண்டார்டிகாவுக்கு ஆராய்ச்சி பணிக்காக வர உள்ளனர். இவர்களால் கொரோனா தொற்று அண்டார்டிகாவுக்கும் பரவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மற்றொரு இங்கிலாந்து விஞ்ஞானி  ரோரி ஓ கார்னர் கூறுகையில், ‘‘விரைவில் பலர் ஆய்வுப்பணிக்காக இங்கு வர உள்ளனர். அவர்கள் மூலமாக கொரோனா அண்டார்டிகாவிலும் நுழைவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. ஒருவேளை அவ்வாறு வைரஸ் பரவினாலும் இங்கும் உலகின் மற்ற பகுதிகளைப் போல கட்டுப்பாடுகள் அவசியமானதாகிவிடும்’’ என்றார். அதே சமயம், அண்டார்டிகாவில் எக்காரணம் கொண்டும் கொரோனா நுழையக் கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட சில உலக நாடுகள் இணைந்து பணியாற்றுகின்றன. அண்டார்டிகா பயணிக்கும் விஞ்ஞானிகளுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அண்டார்டிகா குழுவினருக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. விமானம் அல்லது கப்பல் பயணத்தில் அவர்கள் யாருடனும் நேரடி தொடர்பில் இருக்கக் கூடாது, சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து மட்டும் 120 பேர் கொண்ட குழு அண்டார்டிகாவில் கோடைக்கால ஆய்வுப்பணிக்காக புறப்பட்டுள்ளது. இவர்களுக்கு தனிமைப்படுத்துதல், வைரஸ் பரிசோதனை போன்றவை முழுமையாக செய்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதையும் தாண்டி கொரோனா அண்டார்டிகாவில் நுழைந்து விடுமா? உலகின் எந்த மூலை முடுக்கையும் விடாத கொரோனா அண்டார்டிகாவிடம் மட்டும் தோல்வி அடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

* அண்டார்டிகாவை பொறுத்த வரை இரண்டே இரண்டு காலநிலைதான். ஒன்று, வெயில் காலம். இன்னொன்று குளிர்காலம்.
* ஏப்ரல் முதல் அக்டோபர் வரை குளிர்காலம். அடுத்த 6 மாதம் வெயில் காலம்.
* குளிர்காலத்தில் சூரியனை பார்க்கவே முடியாது. எங்கு பார்த்தாலும் உறைபனி கொட்டிக் கிடக்கும்.
* வெயில் காலத்தில் சூரியன் மறையவே மறையாது. 28 டிகிரி செல்சியல் வரை வெயில் அடிக்கும்.


Tags : Nangathan Kettu , No shield to face, no social space, no carving!
× RELATED விமானம் நடுவானில் மேகக் கூட்டத்தில்...